பிள்ளையானுக்குப் பிணை கோரிக்கை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில் அன்றைய தினம் இந்தப் பிணைக் கோரிக்கை தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு அறிவித்து சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதியரசர்கள் குழாம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி.குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரான பிள்ளையான் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துத் தெரிவிக்கையில் தமது சேவை பெறுநர் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
பிணைக் கோரிக்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒரு நபர் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையில் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கான அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் தமது சேவை பெறுநரைப் பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி, நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் திருத்தப்பட வேண்டும் எனச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |