புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
மந்தாரம் நுவர காவல்துறை பிரிவுக்குட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (30.09.2024) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு
மந்தாரம் நுவர காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மேலும் நான்கு சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அதில் தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த சந்தேக நபர் 41 வயதுடையவர் எனவும் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர காவல்துறையினர் நுவரெலியா தடயவியல் காவல்துறையினரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.