முடக்கப்பட்ட தம்பதியொன்றின் சொத்துக்கள்! வெளியாகிய அதிர்ச்சிப் பின்னணி
உடனடிப் பணப் பரிமாற்ற அமைப்புகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்குச் சொந்தமான சொத்துக்களை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதச் சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நீண்டகால விசாரணையைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறி சாரா உயன பகுதியில் வசிக்கும் இந்தத் தம்பதியினர், 2017ஆம் ஆண்டு முதல் இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முடக்க உத்தரவு
இந்த சட்டவிரோத வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணம், பெண் சந்தேக நபரின் தாயாருடைய வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெண் சந்தேக நபர் தனது சட்டவிரோத வருமானத்தைப் பயன்படுத்தி, 2023 டிசம்பர் மாதத்தில் அத்துருகிரிய, ஒருவளைப் பகுதியில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆறு பேர்ச் காணியையும் அதில் கட்டப்பட்ட வீட்டையும் வாங்கியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, பணமோசடித் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் அந்தச் சொத்துக்கு நேற்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஏழு நாட்களுக்கு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சட்டவிரோதச் சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அத்துருகிரிய பகுதியில் வைத்து இத்தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் மற்றும் 37 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மற்றும் பெண்ணின் தாயாரின் பெயர்களிலுள்ள ஆறு வங்கிக் கணக்குகள் குறித்தும், போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் ஆடம்பர வாகனம் குறித்தும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |