யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி!
புதிய இணைப்பு
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்து யாழ். தென்மராட்சி கெற்பேலி, வீரபத்திரர் கோவிலடியில் இன்று (28) காலை 8:25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் காவ்துறையினர் இருவர் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழி மறித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம்
உழவு இயந்திரம் நிறுத்தாது காவல்துறை உத்தியோகத்தர்களை மோதி தள்ளியதோடு நிறுத்தாமல் சென்றதனால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் காயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து கிளாலியில் வைத்து குறித்த உழவு இயந்திரத்தை கைப்பற்றியதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய ஹெட்டியாராட்சிக்கே அல்பேட் என்ற காவல்துறை உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
மேலதிக தகவல்கள் - கஜிந்தன் , பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறை குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை குழுக்கள்
இவ்வாறு உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பேட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கஜிந்தன் , பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |