சகல பேதங்களுக்கும் அப்பால் மக்கள் ஜனநாயக எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஆசிரியர் சங்கம்!
காணாமல் ஆக்கப்பட்ட பலநூறு உறவுகளின் குழந்தைகள், உறவினர்கள் படும் வேதனை சுமந்த வாழ்வுக்கு விடிவு வேண்டும் என பல நாட்களாக நடத்திவரும் போராட்டம் இன்று சகல பேதங்களுக்கும் அப்பால் மக்கள் ஜனநாயக எழுச்சிப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் அனாதைகளாக்கப்பட்ட பள்ளி செல்லும் பிள்ளைகளின் உறவுகளை விடுவிக்குமாறு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கையொப்பங்களைப் பெற்று உரிய தரப்பிடம் கையளித்தோம். இன்று வரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.
மாறாக ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் நீண்டு செல்கின்றது. இதற்கு தீர்வு வேண்டி இன்று மக்கள் எழுச்சிப்போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இத்தகைய போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழு ஆதரவை வழங்கி நிற்கின்றது.
பிரிக்கப்படாத தொப்புழ் உறவோடு வாழும் எம் இனத்தின் துயரவாழ்விற்கு நீதி கிடைத்து எதிர்கால சந்ததியாவது நிம்மதியாக வாழ்வதற்கு வழியேற்பட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த ஆசிரிய சமூகமும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.