இந்தியா தொடர்பில் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடு
இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான தமிழ் அமைப்புக்களின் உணர்வலைகள் பற்றியும், இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் அமைப்புக்களும் எடுத்திருந்த நிலைப்பாடுகள் பற்றியும், கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகின்றோம்.
ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலுமாக தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்த விடுதலைப் புலிகள், இந்த ஒப்பந்தத்தினால் ஈழத் தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு ஏற்பட இருந்த அபாயத்தையும் நன்கு உணர்ந்தே இருந்தார்கள்.
அதனால் இந்திய அரசின் செயல்களை எதிர்க்கும் முடிவுக்கும் வந்திருந்தார்கள். திலீபனின் உண்ணாவிரதத்தின் மூலம், அகிம்சை வழியில் தமது எதிர்ப்புக்களை இந்தியாவிற்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.
ஆனால், இந்த உண்ணாவிரதத்தின் போதும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இடம்பெற்ற சில அசம்பாவிதங்களின் போதும் இந்தியா நடந்துகொண்ட விதம், வேறு வழி இல்லாமல் புலிகளை மீண்டும் ஆயுதங்களை நோக்கியே நகரவைத்தன.
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியை மிக விரிவாக ஆராயும் முன்பதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் , இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை உலகிற்கும், குறிப்பாக இந்தியாவிற்கும் வெளிப்படுத்தியிருந்த மற்றொரு சம்பவத்தையும் பார்த்து விடுவது அவசியம்.
பிரபாகரனின் புரொன்ட்லைன் சஞ்சிகைப் பேட்டி
இந்தியாவில் இருந்து வெளியாகும் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு பிரபாகரன் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் செவ்வியின் போது, ஒப்பந்தம் பற்றிய புலிகளின் நிலைப்பாட்டையும், ஒப்பந்தம் தொடர்பான புலிகள் மேற்கொள்ள இருந்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும், பிரபாகரன் மிகவும் சூட்சுமமாக தெளிவு படுத்தியிருந்தார்.
ஒப்பந்தம் தொடர்பாக எதிர்காலத்தில் புலிகள் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைகளின் எதிர்வுகூறலாகவும் இந்தச் செவ்வி அமைந்திருந்தது. அந்தப் பேட்டியின் சாராம்சம் இதுதான்
கேள்வி: இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: இந்த ஒப்பந்தம் இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்பாடு. இது பற்றி எமது மக்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் சர்வஜன வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமானால், கிழக்கு மாகான மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தவேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண பெரும்பாண்மையினால் இந்த இணைப்பு தீர்மாணிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்குகிழக்கு மாகாணங்கள் அடங்கிய நிலப்பரப்பானது எமது தாயகப் பூமி.
இதில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.1983 இல் வடக்குகிழக்கில் ஒரு சில இராணுவ முகாம்களே இருந்தன.
ஆனால் தற்பொழுது 200 இற்கும் அதிகமான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பகுதிகளில் உள்ள சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாக்கும் நோக்குடன்தான் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த இராணுவ முகாம்களை அகற்றாமல் சிங்களக் குடியேற்றங்களை அகற்றமுடியாது என்பதுடன், இந்த இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாகவோ அல்லது இந்தச் சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவது தொடர்பாகவோ, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
இது, இந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற மிகப்பெரிய குறைபாடு. தமிழ்ப் பகுதிகளை ஊடுருவி உள்ள சிறிலங்காவின் ஆயுதப் படைகள் தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவே இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், தமிழ் பிரதேசங்களில் சிங்களப் படைகள் நிலைகொண்டுள்ள இடங்களுக்கு இந்தியப்படைகள் செல்லவில்லை.
இந்தியப்படையணிகள் பெரும்பாலும் யாழ்பாணக் குடாநாட்டுக்குள்ளேயே முகாமிட்டு நிலைகொண்டுள்ளன. இயக்கச்சி, பளை, கொடிகாமம், தாளையடி, பண்டத்தரிப்பு, காங்கேசன்துறை என்று இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள்.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் 200 இற்கும் அதிகமான சிங்கள இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்ற எமது கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை.
மாறாக, தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்துவரும் யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது மக்கள் மத்தியில் அச்சமும், சந்தேகமும் தோன்றியுள்ளது.
தமிழர் தேசியப் பிரச்சனையில் இரண்டு அடிப்படையான அம்சங்கள் உள்ளன. ஒன்று தமிழர் தாயகம்.
அதாவது வடக்கு கிழக்கு இணைந்ததும், பூகோள ரீதியாக முழுமையுடையதும், பிரிக்கமுடியாததுமான தமிழரின் தாயகப் பூமி. இரண்டாவது, தமிழரின் நில உரிமைப்பாடு.
இந்த இரண்டு அடிப்படையான பிரச்சனைகளையும் இந்திய-இலங்கை உடன்படிக்கை தீர்த்துவைக்கத் தவறிவிட்டது என்றே கூறவேண்டும்.
சிறிலங்கா இராணுவம் வெளியேறவேண்டும்
கேள்வி : இந்தியா பற்றியும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றியும் உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில்: இந்திய அரசு தனது சொந்த தேசிய நலனை மட்டுமே கருத்திற் கொண்டு அவசரஅவசரமாக இந்த ஒப்பந்தத்தை செய்திருக்கின்றது.
நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டுவரும் ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், பிரச்சனைகளையும் இந்தியா கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
கேள்வி: இது பற்றி மேலும் விளக்க முடியுமா?
பதில்: இன்று முல்லைத்தீவில் தமிழ் மக்கள் அகதிகளாக வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றார்கள். தமிழ்ப் பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தி வருகின்றார்கள்.
எமது மக்களின் பிரச்சனைகள் எதுவும் இதுவரை தீர்க்கப்பட்டதாக இல்லை. இதற்கிடையில் நாங்கள் எமது ஆயுதங்களைக் கையளிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். மக்களின் பிரச்சனைகள் முதலில் தீர்க்கப்படவேண்டும்.
அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளச் சென்று குடியமர வேண்டுமானால், அப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா படைகளின் இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும்.
ஆனால், சிங்கள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு இந்திய இராணுவம் தயாரில்லை போன்றே தெரிகின்றது. ஆகவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக இந்தியா எம்முடன் பேச்சுக்களை நடாத்தியிருந்தால் சிங்கள இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருப்போம்.
ஆனால் அப்படியான பேச்சுக்கள் எதையும் இந்தியா எம்முடன் மேற்கொள்ளவில்லை.
கேள்வி: ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி, சுதுமலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நீங்கள் உரை நிகழ்த்தும்போது, ராஜீவ் காந்தியுடன் மனம் விட்டு பேசியதாக தெரிவித்ததுடன், அப்போது அவர் உங்களிடம் சில வாக்குறுதிகளை தந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். எப்படியான வாக்குறுதிகளை ராஜீவ் காந்தி உங்களிடம் தந்திருந்தார்?
பதில்: வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ராஜீவ் காந்தி எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலைதான் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் அங்குள்ள பல பிரதேசங்களுக்கு செல்லமுடியாத நிலைதான் உள்ளது.
சிங்கள இராணுவத்தினர், சிங்கள ஊர்காவல் படையினர், சிங்களக் குடியேற்றவாசிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கள் காரணமாக தமிழ் மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்ப முடியாதிருக்கின்றது.
தனியார் வீடுகள், பாடசாலைகள், பொதுக்; கட்டிடங்கள், போன்ற இடங்களில் எல்லாம் சிங்கள இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையில், மக்கள் எவ்வாறு அங்கு மீளக் குடியேறுவது?
கேள்வி: கிழக்கில் விடுதலைப் புலிகள் பலம் வாய்ந்த அமைப்பாகச் செயற்பட முடிகின்றதா?
பதில்: கிழக்கில் எமது அமைப்பு பலம்வாய்ந்த ஒரு அமைப்பாகச் செயற்பட முடிகின்றது. திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் நாம் இணக்கவேலைகளை விரிவாக்கி வருகின்றோம்.
இப்பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேறியுள்ள இடங்களில்கூட எமது உறுப்பினர்கள் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மூதூரில் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றிவைத்த பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த இந்திய இராணுவத்தினரும், அரசாங்க அதிபரும் புலிக்கொடியை இறக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்கள்.
இருந்த போதிலும் அதற்கு கட்டுப்பட பொதுமக்கள் மறுப்புத் தெரிவித்ததுடன், தமது நடவடிக்கைகளில் உறுதியாக இருந்திருக்கின்றார்கள். கிழக்கிலங்கை மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களாக, எமது அமைப்பிற்கு அனைத்து ஆதரவினையும் வழங்கி வருகின்றார்கள்.
இவ்வாறு, பிரபாகரன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். பிரபாகரன் இந்த செவ்வியை வழங்கி தற்பொழுது சுமார் 15 வருடங்கள் கடந்துவிட்டுள்ளன.
இருந்த போதிலும், தற்போதய சமாதான முன்னெடுப்புக்களின் போது இடம்பெற்றுவரும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது, பிரபாகரன் அவர்கள் அன்று வழங்கிய செவ்வியில்; காணப்படுகின்ற சில அம்சங்கள், இன்றைக்கும்; பொருந்துவதாக இருப்பது நோக்கத்தக்கது.