பிரபல செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்தை பின்னுக்கு தள்ளிய பிரக்ஞானந்தா!
பல ஆண்டுகளாக இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வரும் செஸ் வீரரான விஸ்வநாத் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான, பிரக்ஞானந்தா தேசிய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலமே விஸ்வநாத் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.
தேசிய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்
இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வெறும் 18 வயதிலேயே நாட்டின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு நடப்பு உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
பிரக்ஞானந்தா,கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு, பல சரித்திரமும் படைத்துள்ளார். 2023ம் ஆண்டில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளைய செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதி போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |