அரசாங்கத்தின் பலத்தை நினைவூட்டிய அநுர: எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்திக்கு (NPP)வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்க்கட்சிகளுக்கு எச்சரித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளார் என்பதை நினைகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) 60வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி செய்வதற்கான ஆணை
267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி ஆணையைப் பெற்றுள்ளதாகவும், முதல் நாளில் 152 உள்ளூராட்சி மன்றங்களிலும், மீதமுள்ள 115 உள்ளூராட்சி மன்றங்களிலும் விரைவில் கட்டுப்பாட்டை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், ஆட்சி செய்வதற்கான ஆணையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும், சில உள்ளூராட்சி சபைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்பட்ட எந்தவொரு உள்ளூராட்சி சபையும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
