பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க மும்முரம் காட்டும் அநுர அரசு
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நாட்டில் இல்லாது செய்வதே தமது அரசியல் ரீதியான கொள்கையாக ஆரம்ப காலத்தில் இருந்து காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
தற்போது நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலின் போதும், ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதற்கான வாக்குறுதிகளை வழங்கியமை தொடர்பிலும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதியும் இந்தவிடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துவதுடன், நீதி அமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில், ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு ஏற்கனவே குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டங்களை வகுப்பதற்கும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக் காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
