கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கைது செய்யப்பட்ட அரச அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
மேலதிக நீதவான்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவவை சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தனர்.
இந்தநிலையில், அவர் கடமை தவறியதால் இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு
அத்தோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபரான அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சந்தேக நபரின் தொலைப்பேசி அழைப்புகளின் பதிவை அழைக்க காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரியதன் அடிப்படையில், சந்தேக நபரை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில், இன்று (30) அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
