தாக்குதல் எதிரொலி : வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்...!
யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார்.
குறித்த சம்பவமானது நேற்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பேருந்தின் நடத்துனர் தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் இன்று (21) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தீவிரமான தாக்குதல்
இது தொடர்பாக தனியார் பேருந்து சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் ஐபிசி தமிழுக்கு தெரிவிக்கையில்,
"நேற்று (20) எதிர்பாராத வேளையில் நடைபெற்ற இந்த தீவிரமான தாக்குதல் அனைத்து தனியார் பேருந்து சேவையாளர்களுக்கும் உயிர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது.
தவிரவும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட போதும், காவல்துறையினர் இந்தப் பிரச்சினையில் ஒரு அசமந்தப் போக்கை காண்பிக்கின்ற நிலையிலேயே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
உரிய தீர்வு
764 வழித்தட பேருந்து சேவை மாத்திரமே தற்போது சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதற்கு உரிய தீர்வு எட்டப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை இந்த வேலைநிறுத்தப்போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
இந்த போராட்டமானது எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவடையும் எனவும் உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் யாழ் மாவட்டத்தையும் தாண்டி வடமாகாணம் முழுவதும் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு இது பாரிய போராட்டமாக உருவாகும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |