வெடித்த சர்ச்சை: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ!
செம்மணிப் புதைகுழி தொடர்பான அறிக்கையில் 'பெரும் புதைகுழி' என்ற சொல்லை பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளார் எனச் சந்தேகிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் சட்டத்தரணிகள் குழாமொன்று நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளனர்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது, 'பாதிக்கப்பட்ட தரப்பினர்' என்ற வகையினரின் சார்பில் சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றில் தொடர்ச்சியாக முன்னிலையாகி வந்தனர்.
அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் புதைகுழி
அதில் மேலும் உள்ள விடயங்களின் சாராம்சமாவது: பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் 'பெரும் புதைகுழி' (பல மனித உடல்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்டுள்ள கூட்டுப் புதைகுழி) என்ற சொல்லை வேண்டுமென்றே நீக்கியுள்ளார்.

இதற்கு முன்னர் அவரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அந்தச் சொற்றொடர் உள்ளடங்கியிருந்த நிலையில், தற்போதைய அறிக்கையில் அந்தச் சொல் விடுபட்டுள்ளமையானது திட்டமிட்ட நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.
இது தீவிரமான சந்தேகங்களையும் எழுப்புகின்றது. குறித்த அகழ்வுப் பகுதியை வழக்கமான அடக்க இடமாகக் கருதுவதற்கான அடிப்படை ஏதேனும் இருந்தால், அதனை அறிக்கை தெளிவுபடுத்த வேண்டும்.
நம்பகமான சான்றுகள்
இதற்காகப் பொருத்தமான மயானப் பதிவுகள், நிலப் பயன்பாட்டின் வரலாறு, பொருந்தக்கூடிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஏனைய நம்பகமான சான்றுகள் ஆராயப்பட வேண்டும்.

எச்சங்களின் ஆழம், பரவல், மண் அடுக்குகளில் அவற்றின் அமைவிடம் மற்றும் அவற்றின் நிலை ஆகியவை தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் முக்கியமான அம்சங்களாகும்.
இந்த அம்சங்கள் வழக்கமான அடக்கம் என்ற முன்வைக்கப்பட்ட விளக்கத்துடன் பொருந்துகின்றனவா என்பதை அறிக்கை விளக்க வேண்டும்.
மேலும், முடிவுகளுக்கு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் அவதானிப்புகளையும் ஒப்பீட்டுச் சான்றுகளையும் அடையாளப்படுத்த வேண்டும் என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |