தையிட்டி ஆக்கிரமிப்பாளர்களை உற்சாகப்படுத்தியுள்ள அநுரவின் யாழ் விஜயம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
புதிய இணைப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூஜை நடவடிக்கைகள் ஜனாதிபதியின் அண்மைய யாழ் விஜயத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று தையிட்டியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தின் போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”தையிட்டியில் ஆக்கிரமிப்பாளர்கள் மிகவும் உற்சாகமாக இன்று காலையில் ஒலிபெருக்கி மூலமாக பிரித் ஓதுதல்களை ஆரம்பித்துள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒலிபெருக்கி மூலம் பிரித் ஓதுவதனை தவிர்த்து செயற்பட்டவர்கள் தற்போது மீளவும் உற்சாகமாக ஆரம்பித்துள்ளார்கள்.
தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளும் ஜனாதிபதி சட்டவிரோத பிக்குவிடம் ஆசிபெற்றமையும் ஆக்கிரமிப்பாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இனப்படுகொலையின் பங்காளியும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்கா கடந்த 01-08-2025 திகதி மயிலிட்டிக்கு அடிக்கல் நாட்ட வந்தார்.
மயிலிட்டி துறைமுத்திற்கு மீதி ஆக்கிரமிப்பை இலக்காகக் கொண்டு அபிவிருத்தி என்னும் போர்வையில் அடிக்கல் நாட்ட வந்தவரை நோக்கி தையிட்டிக் காணி உரிமையாளர்கள் தமது காணிகள் விடுவிக்கப்படல் வேட்டுமென வலியுறுத்தி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குத் திரும்பும் சந்திக்கு அருகில் அமைதி வழியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஏழைகளின் நண்பன் பாட்டாளிகளின் பிள்ளை என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதியின் கீழுள்ள காவல்துறையினர் அப்போராட்டக்காரர்களை அடித்து விரட்டினார்கள்.
அதேவேளை அந்த காவல்துறையினருக்கு ஆதரவாக அதே வலி வடக்கு பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியின் தவிசாளர் சுகிர்தன் அநுரவுக்கு வரவேற்பளிக்கச் சென்றிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக அன்றையதினம் மண்டைதீவில் இடம்பெற்ற சர்வதேச மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகு சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பிக்குவை அழைத்து அவரிடம் ஆசிபெற்றார் ஜனாதிபதி அநுரகுமார.
இச்செயற்பாடுகள் ஆக்கிரமிப்பாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தத் துரோகங்களுக்கு எதிராக நாம் போராடுவதே விடுதலைக்கான ஒரே வழியாகும்.” என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்று (6) பிற்பகல் ஆரம்பமான இந்தப் போராட்டம் இன்று (7) மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தையிட்டி விகாரையை அகற்றக் கோரி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

