சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்கான போராட்டம்! முஸ்லிம்களே ஒன்றிணையுங்கள் - பகிரங்க அழைப்பு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகமும் ஆதரவு வழங்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் முஸ்லிம் மக்களும் தங்களின் பங்களிப்பினை செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கோவிட் 19 தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றது.
எனவே இதற்கு எமது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும். இது சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்கான போராட்டம், அனைவரும் இன ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.