பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் : நீதி அமைச்சர் அறிவிப்பு
பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய பாதுகாப்பையும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வினவியபோது அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் எந்தளவுக்கு மோசமானது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இந்த நாட்டில் வரலாற்று ரீதியில் பல முரண்பாடுகள் ஏற்படுவதற்கு அந்த சட்டம் பிரதான காரணியாக அமைந்துள்ளது.
1979 ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்றளவில் நடைமுறையில் உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஒருசில ஏற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளுக்கும், ஜனநாயக கொள்கைக்கும் எதிரானது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இந்த குறைபாடுகள் முன்வைக்கப்பட்டு, பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வோம் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.
இருப்பினும் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு இந்த சட்டத்துக்கு அமையவே செயற்படவேண்டிய நிலைமை காணப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும்
இதற்கமைய 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டிய தேவையின் அடிப்படையில், குறித்த விடயங்களுக்கு உரிய அடிப்படை எண்ணக்கருவை தயாரிப்பதற்காக விசேட நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப விசேட நிபுணத்துவக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள முதனிலை சட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்' எனும் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு சட்ட மா அதிபர் அனுமதி அளித்துள்ளார். இந்த சட்டமூலம் வெகுவிரைவில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும். அதனைத் தொடர்ந்து முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.
தேசிய பாதுகாப்பையும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். புதிய சட்ட உருவாக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் தரப்பினர் நடைமுறை நெருக்கடிகள் மற்றும் பூகோள பயங்கரவாதம் உள்ளிட்ட பொதுவான காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |