எனது கடவுள் பிரபாகரன்! கை கொடுத்த நாமல் - அர்ச்சுனா எம்.பி. நெகிழ்ச்சி
எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன் என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர் என்று இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டையில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கடமையில் இருந்த போக்குவரத்துப் காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்து தவறான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட அர்ச்சுனா எம்.பி. கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முழு நாடும் அதை நம்பியது
அர்ச்சுனா நேற்று நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன்.
ஆனால், இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் தலைவர் அல்லர், ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.
நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக் கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர்.
பிரபாகரன் எனது தலைவர்
ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன்.
பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வி எழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்குத் தெரியும். என்னைப் பைத்தியம் என்று கூறுவதால் எனக்குக் கவலையில்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
