சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ரணில் - சஜித் காரசார மோதல்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் பல விடயங்கள் தொடர்பில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்குமிடையிலான வாக்குவாதத்தின் போது, ஒலிவாங்கி மற்றும் ஒளிப்பதிவுக் கருவிகளை நிர்வகிப்பவர்கள் திறம்பட செயற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.
ஒளிப்பதிவுக் கருவி முரண்பாடு
நாடாளுமன்ற அமர்வில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் ஒலிவாங்கி மற்றும் ஒளிப்பதிவுக் கருவிகளை நிர்வகிப்பவர்கள் திறம்பட செயல்படவில்லை என குற்றம் சாட்டினார்.
ஒளிப்பதிவுக் கருவி சரியான வரிசையில் செய்யப்படுகிறதா என்பதை உறுதிசெய்யுமாறும் தயவு செய்து பாரபட்சமாகவும், பக்கச்சார்பாகவும் செயற்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
அப்போது கருத்து தெரிவித்த அதிபர், “எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துடன் தான் உடன்படுவதாகக் கூறினார்.
தயவு செய்து எதிர்க்கட்சித் தலைவர் மீது எப்போதும் ஒளிப்பதிவுக் கருவியை வைத்திருக்குமாறும் அவற்றின் கவனத்தை தன் மீது வைக்க வேண்டாம் எனவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், இது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல எனவும் வார்த்தைகளைத் திரிவடைய செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஒளிப்பதிவுக் கருவியை எப்போதும் சஜித் பிரேமதாச பக்கம் இருக்க வேண்டும் என தான் ஒரு கோரிக்கையையே வைப்பதாகவும் அதிபர் பதிலளித்தார்.