ரஞ்சனின் பதவி பறிப்பையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடம்- அடுத்து நியமிக்கப்படுபவர் யார்? வெளியான தகவல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பதவி விலக்கப்பட்டு தற்போது அவரது இடம் வெற்றிடமாவுள்ளது.
இந்நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை நிரப்ப ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் அடுத்த இடத்தில் அஜித் மான்னப்பெரும இருப்பதாகவும், ரஞ்சனின் இடத்திற்கு இவர் பதிலீடு செய்யப்படுவார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் மானப்பெருமவை பதிலீடு செய்ய தமது கட்சி எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும், 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தானியக்க முறையில், அது குறித்த செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்
எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அஜித் மான்னப்பெரும கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47, 212 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அதனடிப்படையில், ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு அஜித் மான்னப்பெரும பதிலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.