ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து தெரிவிக்கவுள்ள ரிஷாட் பதியுதீன்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி முடிவு எதிர்வரும் 14ஆம் அறிவிக்கப்படும் என்று கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்களுடன் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற ஓர் கட்சி. நாட்டில் பத்து மாவட்டங்களில் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கடந்த காலங்களில் போட்டியிட்டுள்ளது.
அகில இலங்கை
அதனடிப்படையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்னார் உட்பட மேலும் பல மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு மக்களின் கருத்துக் கணிப்பை பெற்றுக் கொள்ள உள்ளோம், கடந்த 06 ஆம் திகதி எமது கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்ட போது கட்சிக்குள் இரு வகையான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
எனவே கட்சியினுடைய உறுப்பினர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை உள் வாங்கி அக்கருத்துக்களின் அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் இருந்தமையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளோம்.
எதிர்க்கட்சி
கடந்த காலங்களில் சஜித்தின் கூட்டமைப்புடன் இருந்தமையினால் எதிர்க்கட்சி அரசியலை நான்கு வருடங்களாக முன்னெடுத்தோம், அந்த வகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சி ஆதரவு வழங்க உள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதை அறிவிப்போம்.
அந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் நாடு முழுவதும் இரவு பகலாக சென்று அவரை வெற்றி பெற செய்வதற்காக பாடுபடுவோம்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |