ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன் - அதிர்ந்த மொஸ்கோ..!
உக்ரைன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் அதிரடியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனிய தலைநகர் கீவ் மீது 3 நாட்களாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல்களை அரங்கேற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பயங்கர வெடிச் சத்தத்தை கேட்டதாக மொஸ்கோவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய இராணுவம்
அத்துடன் மேயர் செர்ஜி சோபியானின், இந்தத் தாக்குதலில் கட்டிடம் ஒன்று சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இரண்டு கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோ மாநில ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் வழங்கிய தகவலில், மொஸ்கோ மீதான தாக்குதலில் களமிறக்கப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
இந்நிலையில், ரஷ்யாவின் மீது நடத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது நடத்தப்படும் இரண்டாவது ட்ரோன் தாக்குதல் ஆகும்.
இதற்கு முன்பாக மே 3ஆம் திகதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை குறிவைத்து அவரது மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
Moscow is under massive drones attack.
— Ukraine Front Lines (@EuromaidanPR) May 30, 2023
Witness; “…maybe better to get out of here, they are getting closer and closer..” pic.twitter.com/25zMDZRL7m
இதுதொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், “நாங்கள் ரஷ்ய அதிபர் புடினையோ அல்லது மொஸ்கோவையோ தாக்கவில்லை” என உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தார்.