இலங்கையில் சைவ சமயம் எதிர்நோக்கும் தலைமைத்துவச் சவாலும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் காலத்தேவையும்!
இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்டுப் பாரம்பரியமும் நிலைபெற்றுள்ளது.
அதாவது உலகளவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமயங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்து மதத்தின் முதன்மையான பிரிவான சைவ சமயம், இலங்கையின் பண்பாட்டு அடையாளத்தோடு பிரிக்க முடியாதவாறு வரலாற்று ரீதியாக பிணைந்துள்ளது.
இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் சைவ சமயம் ஒரு கடுமையான தலைமைத்துவ இடைவெளியையும் மற்றும் பிரதிநிதித்துவப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு நிற்கிறது.
🛑 தலைமைத்துவ இடைவெளியும் நடைமுறைச் சவால்களும்...
இலங்கையிலுள்ள ஏனைய முதன்மைச் சமயங்களை உற்றுநோக்கினால் அவற்றின் குரலாகப் பேசுவதற்கும், அரசிடமும் சர்வதேச மட்டத்திலும் அந்தச்சமயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அதிகாரப்பூர்வமான தலைமைப் பீடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
- பௌத்த சமயம்:மகாநாயக்க தேரர்கள்
- கிறிஸ்தவ சமயம்: கர்தினால் மற்றும் ஆயர் பேரவை
- இஸ்லாமிய சமயம்: அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை
ஆனால், சைவ சமயத்தைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான ஆலயங்களும், நூற்றுக்கணக்கான சைவ அமைப்புகளும் இயங்கி வந்தபோதிலும், "சைவ சமயத்தின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி இவர்தான் என்று அரச நிகழ்வுகளிலோ அல்லது தேசிய அளவிலான கொள்கை முடிவுகளின்போதோ முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுவான உச்சக்கட்டத் தலைமை இல்லாத பரிதாப நிலை நீடித்து வருகிறது.
இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு இல்லாததால் சைவ சமய சமூகத்தின் உரிமைகள், ஆலயப் பாதுகாப்பு மற்றும் சமய வளர்ச்சி சார்ந்த விவகாரங்களில் ஒருமித்த குரலாகக் குரல் கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது .
தென்கயிலை ஆதீனமும் தலைமைத்துவ முன்மொழிவும் இப்படியான சூழலில்தான், சைவ சமயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அனுபவமிக்க, ஆளுமைமிக்க ஒரு தலைமையின் தேவை தீவிரமாக உணரப்படுகிறது.
வடக்கு கிழக்கில் இயங்கும் பல சைவ அமைப்புகள், திருகோணமலையை மையமாகக் கொண்டு இயங்கும் தென்கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களை இந்த அமைப்பிற்கான முதன்மைத் தலைமையாக ஏற்றுக் கொள்ளலாம் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் துறவற வாழ்வை மேற்கொண்டு, சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் தங்களை அர்ப்பணித்துள்ள தவத்திரு அகத்தியர் அடிகளார், தற்போதைய துறவிகளில் நீண்ட அனுபவமும் சமய முதிர்ச்சியும் கொண்டவராக விளங்குகிறார்.
பாரம்பரியமிக்க நல்லூர் ஆதீனம் போன்ற பிற பீடங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் நீண்டகாலத் துறவு வாழ்க்கையையும், கிழக்கு மற்றும் வடக்கு சமூகங்களுடனான ஆழமான தொடர்பையும் கருத்தில் கொண்டு அகத்தியர் அடிகளாரை முதன்மைப்படுத்துவது பொருத்தமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
🛑 எதிர்கால நோக்கும் தீர்வும்
எப்படியாக இருந்தாலும் தனிநபர் ஒருவரைத் தலைவராக நியமிப்பதில் எழும் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கவும், அனைத்துப் பகுதிச் சைவர்களையும் ஒருங்கிணைக்கவும் பின்வரும் வழிமுறைகளைச் நாம் செயல்படுத்தலாம்:
- அகில இலங்கை சைவ சமய பீடம்: தென்கயிலை ஆதீனம், நல்லூர் ஆதீனம், மற்றும் ஏனைய துறவிகள் மற்றும் சைவப் பெரியார்களை உள்ளடக்கிய ஒரு துறவிகள் சபை அல்லது உச்சக்கட்ட சைவ பீடம் உருவாக்கப்பட வேண்டும்.
- ஒருங்கிணைந்த குரல்: இந்தச் சபையின் முதன்மைப் பொறுப்பை அனுபவ முதிர்ச்சி கொண்ட துறவிகளிடம் வழங்கி அரச மட்டத்திலான அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
தொன்மையான சைவப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்குச் சமய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கவும் இலங்கையில் சைவ சமயத்திற்கென ஒரு வலுவான கட்டமைக்கப்பட்ட தலைமை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.
இந்த விவகாரத்தில் ஈழத்து சைவசமயிகள் விரைந்து ஒரு முடிவெடுக்காதவிடத்து ஆகப்பெரும் விளைவுகளை எதிர்காலங்களில் சந்திக்க நேரிடும் என்பதனை தவிர்க்கமுடியாது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening