சாணக்கியனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்கள் : இனவாதியாக சித்தரிக்கவும் முயற்சி
இலங்கையின் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் தன்னை இனவாதியாக சித்தரிக்கும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளும் கிழக்கின் முன்னாள் ஆளுநரும் தனக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்வைப்பதாக கூறிய அவர், இனவாத கருத்துக்களை முன்வைக்கும் அம்பிட்டிய சுமன ரத்தின தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று(27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாரதூரமான செய்தி
அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்கிலே வாழும் ஒவ்வொரு தமிழனையும் தாம் வெட்டிச் சாய்க்கத் தயாராக இருப்பதாக அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் பாரதூரமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்தச் செய்தி தொடர்பாக இன்று காலையிலே இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தக் கடிதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பதனை நாங்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கடந்த வாரம் முழுவதும் ஊடகங்களில் தொடர்ச்சியாக என்னைக் குறிவைத்து செய்திகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, களுத்துறையில் ஒரு சில பிக்குகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
புத்தர் சிலை விவகாரம்
பலாங்கொடை கஸ்ஸப் என்று அழைக்கப்படும் மற்றுமொரு தேரர் நானே மயிலத்தமடுவில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை எடுத்து விட்டேன் என்று கூறி இருக்கிறார்.
அடுத்து கிழக்கு மாகாணத்தை நாசமாக்கிய முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் மயிலத்தமடு பிரதேசத்தை பலஸ்தீனத்துடன் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் கொழும்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் சென்று எனக்கு எதிராக முறைப்பாட்டையும் பதிவு செய்திருக்கிறார்” - என்றார்.