சஜித்துடன் முரண்பட்ட சனத் நிஷாந்த : சபாநாயகரிடம் பகிரங்க மன்னிப்பு!
சிறிலங்கா நாடாளுமன்றில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த 21 ஆம் திகதி செயல்பட்டமைக்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சபாநாயகரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் தாம் செயற்பட்டிருக்க கூடாதென சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் நாடாளுமன்றில் கேள்வியொன்றை எழுப்ப முயன்ற போது சனத் நிஷாந்த மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக கூச்சலிட்டு அதற்கு இடையூறு விளைவித்திருந்தனர்.
அத்துடன், சஜித் பிரேமதாசவுடன் முரண்படும் வகையிலும் அவர் செயல்பட்டிருந்தார்.
சபாநாயகரின் நடவடிக்கை
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டதாக தெரிவித்து, சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவையை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமது நடவடிக்கைக்காக மனம் வருந்துவாக கூறி சனத் நிஷாந்த சபாநாயகரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அத்துடன், தமது நடத்தை நாடாளுமன்றுக்கு பொருத்தமற்றது எனவும் சட்டமன்ற அமைப்பில் தாம் இவ்வாறாக நடந்திருக்கக் கூடாது எனவும் சனத் நிஷாந்த தமது கடிதத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
சிறப்புரிமைகளை மீறல்
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோருக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை எனவும், முழு சம்பவத்திற்கும் தம்மை மாத்திரம் தண்டிப்பது சிறப்புரிமைகளை மீறும் செயல் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |