சட்டப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தன்: விடுக்கப்பட்ட கோரிக்கை
சாந்தன் அண்ணாவின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஸ்டிப்பதற்கு அரசாங்கமும், காவல்துறையினரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (01)இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது இந்திய அரசால் சட்டப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தன் அண்ணா அவர்களுக்கு எங்களது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, அவரது உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியாத இழுபறி நிலையில் இருந்தது. இது கூட இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை.
அரசாங்கத்தின் தோல்வி
அதேவேளை, வித்துடல் இன்று (01) இரவு வவுனியா வருமாக இருந்தால் நாளைய தினம் (02) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அத்துடன், வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ந்தும் போராளிகள் நலன்புரிசங்கத்திற்கு எதிராக அல்லது போராளிகளுக்கு எதிராக செயற்படுவதாக நாங்கள் உணர்கிறோம். இது இலங்கை அரசாங்கத்தின் தோல்வியாக கருதுகின்றோம்.
சாந்தன் அண்ணாவின் அஞ்சலி
ஜனநாயக ரீதியில் காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு அறிவித்து விட்டு சாந்தன் அண்ணாவின் அஞ்சலி நிகழ்வுக்கான பதாதைகளை வவுனியா நகரில் காட்சிப்படுத்தியிருந்தோம்.
நகரில் நின்ற போக்குவரத்து காவல்துறையினர் இது தொடர்பில் வினவி காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்று கதைக்குமாறு கூறினார்கள். அப்போது நாம் அவருக்கு தெரியப்படுத்தி விட்டு தான் கட்டுகின்றோம் என்றேன். காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவித்த போது அவர் விருப்பமில்லாத நிலையில் தான் எம்மை பதாதைகளை கட்ட அனுமதித்தார்.
அதேபோன்று, கடந்த மாவீரர் தினத்தன்று வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக இராணுவத்தால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் தொடர்பில் நான் எதிர்ப்பை வெளிப்படுத்திய போது என்னை வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கு வருமாறு காவல் நிலையத்திற்கு அழைத்து கைது செய்தனர்.
கோரிக்கை
நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மறுநாள் மாலையே வீடு சென்றேன். இந்த விசாரணைகளின் போது காவல் நிலையத்திற்குரிய பொறுப்பதிகாரி, நிர்வாக பொறுப்பதிகாரி போராளிகளை அதாவது எம்மை சுட்டுக் கொல்லுவோம் என்ற தோரணையில் கூறினார்கள்.
இது தொடர்பில் அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கின்றோம். தாம் விரும்பியவர்களை சுட்டுத் தள்ளும் அதிகாரத்தை காவல்துறையினருக்கு வழங்க வேண்டாம்.
நாங்கள் ஆயுதமற்று இருகின்றோம். இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு எந்தவித குற்றச் செயலும் செய்யாமல் இருக்கின்றோம். போராளிகளுக்கு தொடர்ந்தும் செய்யும் அடக்குமுறை மிகவும் பாரதூரமானது. இது சர்வதேசத்திற்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதாக அமையும்.
இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கு ஏற்பட்ட தோல்வியாகவும் கருதுகின்றோம். ஜேவிபியினர் கூட கிளர்ச்சிகளை செய்து அவர்கள் சிறை சென்று, தற்போது நாடாளுமன்றம் சென்றுள்ளதுடன், அதிபராக வருவதற்கு கூட முயற்சிக்கின்றார்கள்.
எனவே ஜனநாயக ரீதியாக அரசியல் செய்யவும் எமது மக்களது பிரச்சனைகளை பேசுவதற்கும், பொது பிரச்சனைகளில் பங்காற்றுவதற்கும் எமக்கு அனுமதி வேண்டும். காவல்துறையினராலோ இராணுவமோ இதற்கு தடையை ஏற்படுத்த வேணடாம்.
சாந்தன் அண்ணாவின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியான அனுஸ்டிப்பதற்கும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி் : ஓரணியில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |