சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்க திட்டமிட்ட நபர் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்க திட்டமிட்டுள்ளதாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட நபரை தேடும் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான பதற்ற நிலையை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் (Chavakacheri Magistrate Court) பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற வளாகத்தில் இன்று (29.10.2024) காலை முதல் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக காவல்துறையினருக்கு தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்மநபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் சோதனை
இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு (Batticaloa) நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக காவல்துறையினருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றையதினம் (28.10.2024) மீண்டும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை முன்னெடுத்ததுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வந்த கடிதம் தொடர்பாக காவல்துறைய புலனாய்வு பிரிவினர் தனித் தனியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |