ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
புதிய இணைப்பு
சிரிலிய ஊழல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் உத்தரவை நீதிமன்றம் நீடித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 16 வரை சந்தேகநபரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான ஷிரந்தி ராஜபக்ச இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
ஷிரந்தி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்து, மருத்துவ அறிக்கையொன்றையும் அவரது சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஷிரந்திக்கு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை : நீதிமன்றில் அறிவித்த சட்டத்தரணிகள்
ஷிரந்தி ராஜபக்சவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஷிரந்தி ராஜபக்ச நேற்றைய தினம் (12) சிறைச்சாலையில் இருந்தபோது திடீர் மாரடைப்புக்குள்ளானதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
தேசிய வைத்தியசாலையில் அனுமதி
அத்துடன், அவர் தற்போது திறந்த இதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது, கருத்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சந்தேக நபர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் எனினும், அவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்துவது தொடர்பில் எந்தவொரு தகவலும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, பகிரங்க நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து பிரதான நீதவான், ஷிரந்தி ராஜபக்ச இன்றைய தினம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாரா என்பது குறித்த விபரங்களை உடனடியாக விசாரித்து தமக்கு அறிவிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட அறிக்கை கிடைக்கும் வரை வழக்கு இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அரச வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளின் பேரில் ஷிரந்தி ராஜபக்ச கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவப் பரிந்துரைகளின் அடிப்படையில், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக பல்லேத்தன்ன தெரிவித்தார்.

மருத்துவ ஆலோசனையின் காரணமாக ஷிரந்தி ராஜபக்சவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அது தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நிதி குற்றப் புலனாய்வு பிரிவு
இதேவேளை, 2010 ஆம் ஆண்டில் 'லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கானர் (CT scanner) ஒன்றை வாங்குவதற்காக என்று கூறி ஷிரந்தி ராஜபக்ச விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையைத் தொடர்ந்து, தேசிய சேமிப்பு வங்கியால் சிரிலிய சவிய கணக்கில் வரவு வைக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாயை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாகவும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அந்தச் சம்பவம் தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் தான் கைது செய்யப்பட்டால் தன்னை முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (12) நிராகரித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நேற்று (12) காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மகாநாயக்க தேரரிடம் வாங்கி கட்டிய எதிர்கட்சி எம்பிக்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |