விசாரணைக்கு முன்னிலையாக சிங்கப்பூரிலிருந்து ஷிராந்தி விடுத்த கோரிக்கை
மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வதாகக் கூறி கடந்த 16ஆம் திகதி சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, இன்று(24) பிற்பகல் வரை நாட்டிற்கு திரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் இன்று (24) ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாக எழுத்துபூர்வ அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்ட கடிதம்
வெளிநாடு செல்வதற்காக 16ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது, புலனாய்வு அதிகாரிகள் அந்தக் கடிதத்தை அவரிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

எனினும், மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வதாகக் கூறி அவர் பின்னர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஷிராந்தியிடமிருந்து வந்த எழுத்துபூர்வ கோரிக்கை
மேலும், அது தொடர்பான அறிவிப்பின்படி, புலனாய்வு அதிகாரிகள் முன் ஆஜராவதற்காக அவர் இன்று நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் வரை அவர் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருப்பதால், ஆஜராவதற்கான எதிர்காலத் திகதியை வழங்குமாறு ஷிராந்தி ராஜபக்சவிடமிருந்து எழுத்துபூர்வமான கோரிக்கை தங்களுக்குக் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |