இலக்குவைக்கப்பட்ட ஆறு இடங்கள்! டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பில் திடுக்கிடும் பழிவாங்கல் திட்டம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியின் செங்கோட்டை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைப்பு எதிர்வரும் 6 ஆம் திகதி ஆறு இடங்களில் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டிருந்தமை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலனாய்வாளர்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
1992 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாக டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி பார்க்கப்படுவதாகவும் செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், "பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பழிவாங்க" விரும்பியதால் இந்தத் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு தகவல்கள்
சந்தேகிக்கப்படும் பயங்கரவாத தொகுதியின் உறுப்பினர்கள் விசாரணையின் போது தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான கட்ட வாரியான திட்டத்தை தயாரித்ததாக உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்குதல்களை நடத்துவதே திட்டமாக இருந்த போதும் எனினும் செயல்பாட்டு தாமதத்திற்குப் பிறகு ஒரு புதிய திகதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி, 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, அதே இடத்தில் ஒரு புதிய ராமர் கோயில் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் 2020 இல் தொடங்கி இவ்வாண்டு நிறைவடைந்தன.
இந்நிலையில், பல ஆண்டுகளாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையிலேயே, எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த திட்டம் தொடர்பில் புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |