குக் தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண் - நியூசிலாந்தின் உதவியை நாடிய இலங்கை
குக் தீவுகளில் சிக்கியுள்ள இலங்கைப் பிரஜையான ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவைப் பாதுகாப்பாகவும் விருப்பத்துடனும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான இணை அமைச்சரின் தனிப்பட்ட தலையீட்டை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கெமரன் ப்ரூவருக்கு (Cameron Brewer) உத்தியோகபூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
விசேட மனிதாபிமான அடிப்படை
குறித்த இலங்கைப் பெண்ணை பாதுகாப்பாகவும் அவரின் விருப்பத்தின் அடிப்படையிலும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு, தனிப்பட்ட ரீதியிலான தலையீட்டையும் விசேட மனிதாபிமான அடிப்படையிலான பரிசீலனையையும் மேற்கொள்ளுமாறு அந்தக் கடிதத்தின் ஊடாகக் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் ஆரம்பமானது முதல் நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நியூசிலாந்தின் குடிவரவு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டகங்களை முழுமையாக மதிக்கும் அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில், ஆக்கபூர்வமான இராஜதந்திரத் தொடர்பாடல் மூலம் நடைமுறைச் சாத்தியமானதும் மனிதாபிமானமானதுமான தீர்வொன்றை எட்ட முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நலன் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான பொருத்தமான இராஜதந்திர மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |