மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூபாய் 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
இவர்களையும் உள்ளடக்கி திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நிலுவையில் உள்ள 113 விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 5,423 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 நபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 209 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பிரமிட் நிதி மோசடி மற்றும் வெடிபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேரின் ரூபாய் 367 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துக்களுள் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |