சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறையை மேம்படுத்த உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் : விஜித ஹேரத்
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு கையிறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் உரையாற்றுகையில்,
உற்பத்தி செலவு
மின்கட்டண அதிகரிப்பு, புதிய வரிக் கொள்கை ஆகிய காரணிகளினால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலைமையை மாற்றியமைக்காமல் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. இந்த தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டுமாயின் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும்.
மாணிக்கக்கல் அகழ்வு
மாணிக்கக்கல் அகழ்வுக்கு முறையான திட்டங்களை வகுத்தால் பெருமளவிலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளலாம்.
சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரத்தினக்கல் மதிப்பீடு ஆய்வுகூடம் ஒன்று இல்லாமல் இருப்பது அரச நிர்வாகத்தின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது.
பாரிய தடைகளுக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் இரத்தினக்கற்கள் ஊடாக முழுமையான வருமானம் அரசுக்கு கிடைப்பதில்லை.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தொழிற்றுறையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மடகஸ்கருக்கான தூதரக சேவையை விரிவுப்படுத்துமாறு ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்துகிறோம்.
இரத்தினபுரி, பெல்மடுல்ல ஆகிய பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச அனுமதி வழங்கினார். மக்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அந்த திட்டத்துக்கு அனுமதி வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இரத்தினக்கல் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கினால் தேசிய தொழிற்றுறையினர் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே இரத்தினக்கக்கல் அகழ்வு தொடர்பான கொள்கை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |