இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரியை இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இலங்கை கொழும்பு துறைமுக காவல் நிலையத்தில் பணிபுரிந்த பிரதீப்குமார் பண்டார என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5.9.2020ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்நிலையில் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு மாற்றப்பட்ட நிலையில் இராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் பிரதீப்குமாரின் சகோதரர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த போதைப்பொருளை பிரதீப்குமார் கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.
விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் இராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு
அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டார ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார்.
நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்திய அவர் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்துள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்து, காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
