சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிபர் தேர்தலில் ரணிலின் நிலைப்பாடை அறிவிக்கும் ஹரின்
இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர் நிச்சயமாக தேர்தலில் களமிறங்குவார் என ஹரின் பெர்னாண்டோ உறுதியாக கூறியுள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைவார்கள்.
ரணில் விக்ரமசிங்க நிச்சயம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க உறுதியாக உள்ளார்.
கட்சித்தாவல்
அதிபர் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய தேசியக் கட்சியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடள் இணைவார்கள். நான் கூறுவது நடைப்பெறாவிட்டால் என்னைக் கேலி செய்யலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) பலவீனப்படுத்துவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்துக் கொள்கிறார்.
கட்சியை ஸ்தாபிப்பதற்கு சரத் பொன்சேகா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளினால் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக இல்லாதொழியும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |