யாருக்கு ஆதரவு..ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிறிலங்கா சுதந்திர கட்சி (SLFP) எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் என்பதை இன்று (31) அறிவிக்கவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுக்கள் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை ஆராயவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்று குழுக்கள்
இதேவேளை, கடந்த காலங்களில் பல்வேறு நபர்கள் தமது விருப்பத்திற்கேற்ப கட்சியை பிரித்து சொந்தமாக்க முயன்றதாகவும், தற்போது நீதிமன்றம் தண்டித்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் அதிகாரிகள் குழுக்களுடன் இணைந்து கட்சியை நிர்வகிக்க உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு
அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், அமைச்சர் மகிந்த அமரவீரவும் அறிவித்துள்ளதோடு, தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |