சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி
எனது நாடாளுமன்ற உரைகளை நேரடியாக ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் விதிக்கப்பட்ட தடையானது நீதிக்கோட்பாட்டை மீறும் செயல் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பாக எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி கையளித்த கடிதத்தினை நான் வாசிக்கின்றேன்.
எனது நாடாளுமன்ற உரைகளை நேரடியாக ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நான் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் சட்டத்தரணி தொடர்பாக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக என்மீது குற்றஞ்சாட்டினார்.
ஆனால் நான் அது சம்பந்தமாக எதுவும் குறிப்பிடவில்லை. அத்துடன் நான் இலங்கை முஸ்லிம் மக்களை கூட தவறாக குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் தெளிவாக மறுத்துரைக்கின்றேன்.
நான் நாடாளுமன்றில் ஆற்றும் உரைகளை பொதுமக்கள் கேட்க வேண்டும். ஆனால் 8 நாட்களாக அதனை செவிமடுப்பதற்கு உரிமை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உங்களது அலுவலகம் விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால் எனது உரைகள் ஒளிபரப்பப்பட வேண்டும்.
நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியான 77 நாட்கள் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கின்றேன். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைவிட பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
என்மீது விதிக்கப்பட்ட இந்த தடை நீதிக்கோட்பாட்டை மீறுவதாக அமைவதுடன்இது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை அடக்குவதாக அமைகின்றது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
