இலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய தாழ்தளப் பேருந்து சேவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவை இன்று (21.04.2026) போக்குவரத்து, தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், “சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், பார்வையற்ற பயணிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் எளிதாகப் பேருந்தில் ஏறுவதற்கு ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த 10 தாழ்தள சிறப்புப் பேருந்துகள் இன்று போக்குவரத்து சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை
இதன்படி, தாழ்தள பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 30 பயணிகள் இருக்கைகளும், சக்கர நாற்காலியில் ஏறும் பயணிகளுக்காகத் தனி இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மற்றும் மகாரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார மையங்களை உள்ளடக்கி, மாகும்புரியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும், மாகும்புரியிலிருந்து கடவத்தைக்கும் செல்லும் வழித்தடங்களில் ஒரு முன்னோட்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், மற்ற பயணிகளுக்கும் வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை வழங்கவுள்ளது.
மேலும், இவ்வாண்டு இறுதிக்குள் இவ்வகையான 122 பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
எதிர்காலத்தில் கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் இந்தச் சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |