உலக வர்த்தகத்தின் உயிர்நாடி இலங்கை - அமெரிக்க தூதுவர் புகழாரம்
உலகத்தின் எதிர்காலத்தின் பெரும்பகுதி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எழுதப்படும் என்பதைத் தனது நாடு அங்கிகரிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் தெரிவித்துள்ளார்.
இந்தோ - பசிபிக்கின் மையத்தில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மாநாட்டின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''அனைவருக்கும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, செழிப்பான, நெகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பிராந்தியத்தை அடைய உதவுவதற்காக அமெரிக்கா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீடித்த அர்ப்பணிப்பை தொடரும்.
நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட எமது நாடு தயாராக இருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் கடல் பாதைகளால் உலக வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய உயிர்நாடி இலங்கை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
குறிப்பாக, உலகின் பாதி கொள்கலன் கப்பல்களும், உலகின் மொத்த சரக்கு போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதியும், உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கும் இலங்கையில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இடம்பெறுகிறது.
இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் பகுதிக்கு ஒரு முக்கிய இணைப்பாகும். இது பூமி கிரகத்தின் வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியமாகும் என்பதோடு, உலகப் பொருளாதாரத்தில் 60 சதவிகிதம் மற்றும் கடந்த ஐந்து வருடங்களில் மொத்த பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.
இலங்கை இந்த பிராந்தியத்தின் ஒரு முக்கிய பகுதியாக காணப்படுகிறது. ஆகையினால், இலங்கை இதற்கு தலைமை ஏற்க வேண்டுமென” அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.