ராஜபக்ஷ அரசாங்கத்தின் கழுத்தினை நெருக்கிப் பிடித்துள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு!
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ராஜபக்ஷ அரசாங்கத்தின் கழுத்தினை நெருக்கிப் பிடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனவரியில் ஜி எஸ் பி பிளஸ் தொடர்பான விடயம் இருக்கின்றது. அதேபோல மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் இருக்கின்றது. இவை ராஜபக்ஷாக்களின் கழுத்தை இறுக்கிப் பிடித்துள்ளதாகவும், ராஜபக்ஷாக்கள் சர்வதேச நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு பின்னால் சென்று அவர்களுக்கு பந்தம் பிடித்த காரணத்தினால் தான் உலக நாடுகள் இலங்கை மீது எதிர்ப்புக் கொண்டன. இந்தியாவிற்கு பசில் ராஜபக்ஷ சென்ற போதிலும் பிரதமர் மோடி அவரைச் சந்திக்கவில்லை.
ஏமாற்றமடைந்து நாடு திரும்பிவிட்டார். இந்தியா எமது நாட்டை கௌரப்படுத்தும் நாடு. இவர்களினால் இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரமுடியாது. ஜெனீவா மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ் பி பிளஸ் என்பனவற்றிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பசிலின் விஜயம் அமைந்திருந்தது என்பது யாருக்கும் தெரியும்.
தற்போதைய அரசதலைவர், அமைச்சர்கள், எல்லோருக்கும் பைத்தியம் பிடித்துள்ளது. இதனால் மக்களுக்கும் பைத்தியம் பிடித்துள்ளது. ராஜபக்ஷாக்கள் கொரோனா, கப்பல், உரம் என எல்லா இடங்களிலும் கொள்ளையடித்துள்ளார்கள்.
ஊழல், இலஞ்சம், என ராஜபக்ஷாக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்கள்.
ஆகவே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.