இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் இரண்டு முதியவர்கள் நேற்று(25) காலை புகலிடம் தேடி அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 272 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
புகலிடம் தேடி
இந்நிலையில் தலைமன்னாரை சேர்ந்த நேச பெருமாள் (60) மற்றும் அவரது உறவினர் ராவியத்துல் அதவியா (58) இருவரும் மன்னார் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக இரவு 8 மணி அளவில் பைபர் படகில் புறப்பட்டு அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள தீவு பகுதியில் வந்திறங்கி வெகு நேரம் காத்திருந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதை கண்ட அப்பகுதியில் மீன் பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர் இலங்கை தமிழர்களை படகில் சென்று அங்கு காத்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ வழியின்றி
விசாரணையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம் என தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்
மேலும் அகதியாக சென்றுள்ள நேச பெருமாள் குடும்பத்துடன் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் இலங்கை சிறையில் இருந்துள்ளார்.
அகதிகளின் எண்ணிக்கை
பின்னர் விடுதலை செய்யப்பட்டு மன்னாரில் உள்ள அக்கா வீட்டில் தங்கி இருந்த நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்காக தனுஷ்கோடி வழியாக அகதியாக வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு இருவரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.