இலங்கை - இந்தியா கப்பல் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (03) காலை 7.55 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணித்தை ஆரம்பித்த, சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது பி.ப 12.55 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
பின்னர் மீண்டும் 2.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு வந்த பயணிகள்
இதன்போது இந்தியாவில் இருந்து 93 பயணிகள் இலங்கைக்கு வந்ததுடன், 79 பயணிகள் இலங்கையில் இருந்து இந்தியாவை நோக்கி பயணித்தனர்.

குறித்த கப்பலானது சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணித்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக சேதமடைந்ததனால் ஒரு சில வாரங்கள் சேவையில் ஈடுபடவில்லை.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை கப்பலானது மீண்டும் இன்று முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இன்றையதினம் காங்கேசன் துறைமுகத்துக்கு விஜயம் செய்துள்ளார். இவ்வாறு விஜயம் செய்த இந்திய தூதுவர் சிவகங்கை கப்பல் அதிகாரிகளுடனும், மாலுமிகளுடனும் கலந்துரையாடினார்.
அத்துடன் கப்பல் போக்குவரத்து குறித்து பயணிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் கப்பலையும் பார்வையிட்டார்.
இதன்போது இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன், கப்பல் நிறுவனத்தின் அதிகாரியான பகீரதன், கப்பல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர், கப்பல் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகள், சுங்தத் துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலதிக தகவல் - கஜி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்