வெளிநாட்டில் தங்கியுள்ள குற்றக்குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்!
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரைக் கைது செய்வதற்குச் சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிவப்பு அறிவித்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சிவப்பு அறிவித்தல் மூலம் 35 சந்தேகநபர்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 130 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது சர்வதேச காவல்துறையினரின் (Interpol) உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 226 சிவப்பு அறிவித்தல்களில் சுமார் 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் துபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பதுங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |