ஆபத்தை நோக்கி நகரும் சிறிலங்கா!! எச்சரிக்கையுடன் வந்த தகவல்
விமான நிலையத்தில் மூன்று மணித்தியாலங்களுக்குள் முடிவுகளை பெறும் பி.சி.ஆர் பரிசோதனைகளை இடைநிறுத்தி, மீண்டும் விடுதி தனிமைப்படுத்தல் மாபியாக்களுக்கு சுகாதார அமைச்சு இடமளித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பயணிகளை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் நாட்டுக்குள் அனுமதிப்பது ஆபத்தானதென சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudhos) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ரவி குமுதேஷ், விடுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக சுற்றுலா பயணிகளும் , விமான பயணிகளும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் இரசாயன ஆய்வு கூடங்களை அமைத்து 3 மணித்தியாலங்களுக்குள் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் அங்கு பணம் செலுத்தி பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, சிறிலங்கா பிரஜைககள் சுகாதார அமைச்சின் ஊடாக இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் அதிக நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மாபியாக்கள் நிறுத்தப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் மக்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், எனினும் தற்போது இந்த முறைமை மாற்றப்பட்டுள்ளதாகவும் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.
இது வரையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்றி எதனையும் செய்ய முடியாது எனக் கூறிய சுகாதார அமைச்சு, தற்போது விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை இடைநிறுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்களை ஏற்படுத்துமென ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.