அணிசேரா கொள்கைக்கு சிறிலங்கா முனைப்பு - இராஜதந்திரிகளுக்கு சிறப்பு அறிவுறுத்தல்
பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான புதிய வெளிநாட்டு துதூவர்களுக்கு இடையில் இன்று அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை, நடுநிலையான அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்தும் நோக்குடன் செயற்பட வேண்டும் என இந்தச் சந்திப்பில் புதிய தூதுவர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய தூதுவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் 16 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துகொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நடுநிலையான அணிசேரா நாடு

முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், அனைவருடனும் நட்புறவான, நடுநிலையான அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்தும் நோக்குடன் செயற்பட வேண்டும் என இந்தச் சந்திப்பில் புதிய தூதுவர்களிடம் பிரதமர் கூறியுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், உதவிகள் மற்றும் கடனின் மீது தங்கியிருப்பதைப் பார்க்கிலும் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் துரித அபிவிருத்தியை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டாண்மைக்காக உழைக்குமாறு தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதிக முதலீடு, வேலை வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது சங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விரைவான பொருளாதார மீட்சி

விரைவான பொருளாதார மீட்சியை அடைந்து, விவசாயம், கைத்தொழில், தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், உணவில் தன்னிறைவு அடைவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நிறுவப்பட்ட முதலீட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியாவிற்கான தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வர, இந்தினோசிய தூதுவர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழம்பகே, பிரான்ஸ் தூதுவர் மனிஷா குணசேகர, பஹ்ரைன் தூதுவர் எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே.மெண்டிஸ், வியட்னாம் தூதுவர் கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ், ஜேர்மனி தூதுவர் வருணி முத்துக்குமாரண, லெபனான் தூதுவர் கபில ஜயவீர, இஸ்ரேல் தூதுவர் எம்.எச்.எம்.என்.பண்டார, எத்தியோப்பியா தூதுவர் கே.கே.தெஷாந்த குமாரசிறி, பிலிப்பைன்ஸ் தூதுவர் கலாநிதி சானக எச்.தல்பஹேவா, ஜோர்தான் தூதுவர் பிரியங்கிகா விஜேகுணசேகர, குவைத் தூதுவர் பி.காண்டீபன், ஜெனீவா தூதுவர் ஹிமாலி அருணதிலக்க, ஐக்கிய அரபு இராச்சியம் துதுவர் உதய இந்திரரத்ன மற்றும் மெல்பர்ன் துதுவர் சந்தி சமரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.