முற்றுகையிடப்படவுள்ள நாடாளுமன்றம்- நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறைகூவல்!
சிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி சுற்றிவளைப்போம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள புதிய ஒப்பந்தம் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் எனவும். அச்சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் புதிதாக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்படாகும். வலுசக்தி அமைச்சரின் செயற்பாடு திருட்டுத்தனமானது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய வளங்களை பாதுகாக்க நாட்டு மக்களும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார். அதேவேளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கம் ஒப்பந்தம் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்பட்டதால் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் என மக்கள் மத்தியில் தேசப்பற்றாளரை போன்று கருத்துரைத்து, அதே திருட்டுத்தனமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு ஒரு டொலர் கூட கிடைக்காது. 500 மில்லியன் டொலர் கடன் அடிப்படையில் கிடைக்கப் பெறுகிறது. அதனை வட்டியும், முதலுமாக மீள செலுத்த வேண்டும். பல பில்லியன் பெறுமதியான திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீண்டும் 50 வருட காலத்திற்கு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிச்சயம் நாடாளுமன்றத்தை சுற்றிவளைப்போம். இன்று முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை சர்வதேச நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
தேசிய வளங்களை பணயம் வைத்து அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கிறது. தேசிய வளங்களை பாதுகாக்க தொடர்ப போராட்டத்தில் ஈடுப்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.