நாடாளுமன்றில் கெடுபிடி! பிரதி சபாநாயகரை சாடும் அரசியல்வாதிகள்
கோரமின்மை காரணமாக இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தி 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று (2) நாடாளுமன்றில் உரையாற்றவிருந்ததாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்திருந்த நிலையில், நண்பகல் 1 மணியளவில் சபை ஒத்திவைக்கப்பட்டது.
வாக்குவாதம்
இதையடுத்து, 4 மணியளவில் மீண்டும் நாடாளுமன்ற விவாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதி சபாநாயகருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற விவாதங்களில் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான உறுப்பினர்கள் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தால், அந்த நாளுக்கான விவாதத்தை ஒத்திவைக்காமல் முன்னெடுக்கலாமென எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படும் முக்கிய விவாதங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமெனவும், குறைந்தளவான உறுப்பினர்களுடன் சில விவாதங்களை முன்னெடுக்க முடியாதெனவும் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோரமின்மை
அத்துடன், ஒரு சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்கு போதிய கோரம் இல்லாவிட்டால், நாடாளுமன்றில் பிரசன்னமாகியுள்ள அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறித்த சட்டமூலத்தை வாக்கெடுப்புக்குட்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் இதற்கு முன்னர், குறித்த சம்பிரதாயத்துக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நிராகரித்த பிரதி சபாநாயகர், இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சம்பிரதாயம்
இதையடுத்து, நாடாளுமன்றத்தின் வரலாற்றில் இதுவரை உறுப்பினர் ஒருவர் வரும்வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில்லை என அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச மேற்கொண்ட தனிப்பட்ட தீர்மானம் காரணமாக தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட சட்டமொன்று தொடர்பான விவாதம் நடைபெறும் போது, நாடாளுமன்றில் பிரசன்னமாக வேண்டியது அனைத்து உறுப்பினர்களதும் பொறுப்பு எனவும், அவர்களது கவனயீனத்துக்கு ஆளுங்கட்சி பொறுப்பு கூற முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |