பதவிகளை தக்க வைத்துக்கொள்ளவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற நாடகம் : சஜித் கண்டனம்
நாட்டில் சர்வாதிகாரத்திற்கோ எதோச்சதிகாரத்திற்கோ இடமில்லை, அடக்குமுறைக்குப் பதிலாக,மக்களுக்கு சுதந்திரமும் உண்மையை அறியும் உரிமையும் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் இன்று (24) நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஒடுக்குமுறை சட்டம்
“சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருகின்றது.

நிகழ் நிலைக் காப்பு என்ற பெயரை முன்னிலைபடுத்திக் கொண்டாலும் அதில் எந்தப் பாதுகாப்பும் இல்லை, அடக்குமுறைகளே உள்ளன.
பொதுமக்களின் குரல்களையும், எதிர்க்கட்சியை அடக்குவதுமே இதன் நோக்கம்.
இதற்கென ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அதிபராலேயே மேற்கொள்ளப்படும்.
தாம் கூறும்படி செயல்படாவிட்டால், அந்த உறுப்பினர்கள் நீக்கப்படலாம். தமக்கு நட்பாக செயற்படும் அடியாட்களை நியமித்து தனது பதவிக்கும்,தனக்கும், தனக்கு நெருக்கமானவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் வழங்கிய முந்தைய தீர்ப்புகளுக்கு முரணாக தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊடக அடக்குமுறை சட்டத்திற்கு எந்த செல்லுபடி தன்மையும் இல்லை.
அதிபரால் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழு நீதிமன்றத்தின் அதிகாரத்தை கூட மிஞ்சுகிறது. இது இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
பாகிஸ்தானின் மாதிரி
230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானில் இதுபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த இம்ரான் கான் தயாராக இருந்தாலும் இணைய சேவை வழங்குநர்கள் நாட்டை விட்டு வெளியேற எடுத்த தீர்மானங்களால் அவர் அதை மீளப்பெற நேரிட்டது.

இந்த சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கும் அதிகாரம் உள்ளதால் இணையதள மையங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது.
முகநூல், டுவிட்டர், இண்ஸ்டாகிராம், கூகுள் போன்ற நிறுவனங்கள் கூட இதன் ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம்
தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரத்தை கொண்டு வருகிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்த முயல்கிறது.

அதிபர் பட்டம்,பதவியையும் பாதுகாக்கவே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை முற்றாக ஒதுக்கிவிட்டு அரச பயங்கரவாதத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சட்டங்களால் எந்த புதிய தொழில்நுட்பமும் நம் நாட்டிற்குள் வராது. அந்நிய நேரடி முதலீடு கூட இழக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் மிகத் தெளிவான நோக்கம் மக்களின் குரலை அடக்கி ஜனநாயக உரிமையை அழிப்பதும், பல்வேறு மாற்றுக் கருத்துக்களை அடக்கி ஒடுக்குவதுமே ஆகும்.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை தண்டிக்கவும்,கருத்து சுதந்திரம்,சிந்தனை சுதந்திரம்,ஒன்று கூடும் சுதந்திரம் ஆகியவை இல்லாதொழிக்கப்படும்.
இதுபோன்ற சட்ட மூலங்களை கொண்டுவந்தால்,ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும். இந்த ஊடக அடக்குமுறைக் கொள்கையை முறியடிக்க வீதியில் இறங்கி போராடும்.
இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்களைக் கூட விசாரிக்க முடியாது போகும்.
அரசியல் சதிகளை கண்டு பிடிக்க முடியாது போகும்.” என வலியுறுத்தியுள்ளார்.