ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடியுங்கள்! சஜித் கோரிக்கை
மிலேச்சத்தனமான உஈஸ்டர் தாக்குதல்களின், பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவது மாத்திரமே நீதியை நிலைநாட்டுவதாக அமையும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர்
கருத்துத் தெரிவிக்கையில். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பது எனது பிரதான கடமையாகும். அதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்கவுடன் நாமும் வருகை தந்துள்ளோம்.
மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.
தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இன்றும் கவலையிலுள்ள மக்களுக்கு வழங்கக் கூடிய ஒரே நீதி பிரதான குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிப்பதாகும்.
தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இதனுடன் தொடர்புடைய ஒரு பகுதி மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே தற்போதைய தேவையாகும். 69 இலட்சம் வாக்குகளை வழங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களும் இதனையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய நிவாரணத்தை வழங்கினாலும் உயிரிழந்தவர்களை மீள
உயிர்ப்பிக்க முடியாது.
எனவே உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கமான விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.