புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து சிறிலங்கா முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்!
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்காவிடின் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்களின் முதலீடுகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கிய போதிலும் அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது எமது ஐபிசி தமிழ் செய்திப் பிரிவிலிருந்து தொடர்பு கொண்டு வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் வெளிநாட்டு இலங்கையர்களுக்கான நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமெனவும் புலம்பெயர் மக்களுக்கான பணியாகமொன்று அமைக்கப்படுமெனவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்ட உரையின் போது தெரிவித்திருந்தார்.
தடை நீக்கத்திற்கு வரவேற்பு
இந்த நிலையில், அண்மையில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் மீதான தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியது ஒரு நல்ல விடயமெனவும் நாடாளுமன்றத்தில் ரணில் முன்வைத்த யோசனை வெறும் உரையாக மாத்திரமல்லாது செயன்முறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே ரணிலின் யோசனையை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படலாம்.
புலம்பெயர் தமிழர்களின் நோக்கம்
அவ்வாறு நடக்காத பட்சத்தில் இது ஒரு சாத்தியம் இல்லாத யோசனையாகவே அமையும். அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்வது மாத்திரமே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்கம் எனவும் அந்த நோக்கம் நிறைவேறும் பட்சத்தில் இலங்கைக்கு தேவையான டொலர்களை அவர்கள் பெற்றுத் தருவார்கள்.
தடை நீக்கம் செய்யப்பட புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் நபர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.