தொடரும் விசா சர்ச்சைகள்: நாடாளுமன்றில் வெடித்த விவாதம்
இலங்கையில் தொடரும் விசா சர்ச்சைகள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) மற்றும் சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) ஆகியோருக்கிருக்கிடையில் குறித்த விவாதம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா வழங்கும் முறைமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
விசா கட்டணங்கள்
இந்த புதிய முறைமை தொடர்பில் நாடாளுமன்றத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் அறியப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா முறைமைக்கான கட்டண அதிகரிப்புக்கு மாத்திரம் நாடாளுமன்ற அனுமதி வழங்கப்பட்டதாகவும் VFS Global நிறுவனம் தொடர்பில் இதன் போது எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் தொடர்பில் ஹன்சார்ட் பதிவிலும் குறிப்பிடப்படவில்லை எனவும் விசா கட்டணங்கள் தொடர்பில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
அத்துடன், நாடாளுமன்ற அமைப்பை மீறி விசா வழங்குவது தொடர்பான புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், VFS Global நிறுவனத்தால் அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தை தெரியப்படுத்தவில்லை என சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
VFS Global நிறுவனம் தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் குறித்த குழுவின் அறிக்கைக்கமைய VFS Global நிறுவனம் தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |