சவுதி சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம் : உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த ராஜபக்சலாகே நிலூகா ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி, அவர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி சவுதி அரேபியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இந்தநிலையில், அவர் வெளிநாடு சென்றது முதல் கடந்த 14 ஆண்டுகளாக அவரைப் பற்றிய எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உறவினர்கள் பலமுறை முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.

அதன்படி, 2022 ஓகஸ்ட் 17 ஆம் திகதி CD/183/2208 என்ற இலக்கத்தின் கீழ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கும் இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், 14 ஆண்டுகளாகக் காணாமல் போயுள்ள நிலூகா ராஜபக்சவுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், அவரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் அவரை கண்டறிய உதவுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |